பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை
பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறுகையில், சுமார் இரவு எட்டு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மிக நெருக்கமாக அவர் சுடப்பட்டுள்ளதாகவும் அவரை நோக்கி வந்த ஏழு தோட்டாக்களில் மூன்று அவரது கழுத்திலும் மார்பிலும் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகை நடத்தி வந்த கவுரி பாஜகவினரின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தவர். 55 வயதான கவுரி வலதுசாரிக் கருத்துக்களைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரஹலாத் ஜோஷி என்பவரால் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை எதிர்கொண்டவர். தற்போது கவுரி லங்கேஷின் சகோதரர் தனது சகோதரியின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை விமர்சித்து வந்த நரேந்திர தபோல்கர் 2013 ஆகஸ்ட் 20 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி கோவிந்த் பன்சாரே சுடப்பட்டார். அதன்பிறகு நான்கு நாட்கள் கழித்து அவர் மரணமடைந்தார். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் கல்புர்கி கொல்லப்பட்டார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

