வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்
நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே பதவி நீட்டிப்பில் உள்ள இப்போதைய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரின் பதவிக் காலம் இந்த மாதத்தில் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிய வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டு முதல் 2017 அக்டோபர் வரை சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த கோகலே, தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் பொருளாதார விவகார செயலாளராக பணியாற்றி வருகிறார்.
58 வயதான கோகலே, சீனாவுடனான இந்திய உறவில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த ஆண்டு இந்தியா, சீனா படைகள் இடையே 73 நாட்களாக நீடித்த பதற்றத்துக்கு தீர்வு கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.