"கட்சி, இரண்டாம்பட்சம்தான்!"- விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் பாஜக மூத்த தலைவர் பிரேந்தர்!
வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு விவசாயிகளுக்கு ஆதரவானப் போராட்டத்தில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரி பிரேந்தர் சிங் களமிறங்கியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயி போராட்டங்களை "அனைவரின் கிளர்ச்சி" என்று கூறி, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரி பிரேந்தர் சிங், ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சம்ப்லாவில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மத்திய உருக்கு துறை அமைச்சராக பதவி வகித்தவரான இவர், தனது மகனுக்கு எம்பி சீட் கொடுக்கப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சர் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஹரியானா மாநிலத்தின் பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் பிரேந்தர் சிங், தற்போது மத்திய பா.ஜ.க நிர்வாக குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். இவர், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பணக்காரர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பல சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு உந்துசக்தியாக இருந்தவருமான, ஜாட் தலைவர்களில் முக்கியமானவருமான சர் சோட்டு ராமின் பேரன் ஆவார்.
கடந்த சில மாதங்களாகவே விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்து வரும், பிரேந்தர் சிங் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தனது தாத்தா சிலை முன் அமர்ந்து தர்ணா ஈடுபட்டு வருகிறார். பிரேந்தர் சிங் சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங் ஹிசாரிலிருந்து பாஜக எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பாஜகவில் இருந்துகொண்டே விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது ஹரியானா பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது தொடர்பாக பேசியுள்ள பிரேந்தர் சிங், "வேளாண் சீர்திருத்தங்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சர் சோட்டு ராமின் பேரன் நான். என்னால் விவசாயிகள் கஷ்டப்படுவதை பார்த்து சும்மா இருக்க முடியாது. அதனால்தான் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறேன். அவர்களின் எதிர்காலத்திற்காக தர்ணா நடத்தி வருகிறேன்.
வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை சர் சோட்டு ராமின் சிந்தனையாக இருந்தன, மேலும் அவர் இந்தியாவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய விவசாய சீர்திருத்தவாதி ஆவார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, எனது மகன் அரசியலில் இறங்கினால் நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தேன். அதுதான் எனது முடிவு. இப்போது நான் எந்த அரசியலையும் செய்ய விரும்பினால் அது விவசாயிகளுக்காக மட்டுமே இருக்கும்.
நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். சமூகத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமல்ல, இது இப்போது அனைவரின் கிளர்ச்சியாகும். எல்லோரும் இந்த கிளர்ச்சியைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஒரு தீர்வை விரும்புகிறார்கள். கடந்த 5-6 நாட்கள் மிகவும் குளிராக இருந்தன. அந்த நிலையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயத் தலைவர் சி சோட்டு ராமின் பேரன் என்னும் முறையில் விவசாயிகளுடன் நிற்பது எனது தார்மீகப் பொறுப்பும் கடமையும் ஆகும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நியாயமானது. எனது நண்பர்களும் நானும் போராட்டத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் போரில் போராடவும் முடிவு செய்துள்ளோம். விவசாயிகளின் பிரச்னைகளை எழுப்புவது கட்சி விரோத நடவடிக்கை அல்ல. கட்சியில் நீடிக்கும் போதும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பேன். முதலில் விவசாயிகளுக்குதான் முன்னுரிமை. அதன்பிறகே கட்சி. இது ஒரு தீர்க்கமான போர்.
உழவர் சங்கங்களின் தலைவர்கள் எங்களை பேச அனுமதித்தால், நான் எனது ஆதரவாளர்களுடன் திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளுக்கு சென்று விவசாயிகளுக்கு ஆதரவளிப்பேன். நிலைமைக்கு தீர்வு காண ஒரே வழி பேச்சுவார்த்தை. ஆனால் அது முடிவானதாக இருக்க வேண்டும். தலைவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுத்த பின்னரே இது நடக்கும்" என்று தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.