அவுரங்காபாத் 'பெயர் மாற்று' அரசியல்... சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் வலுக்கிறதா விரிசல்?

அவுரங்காபாத் 'பெயர் மாற்று' அரசியல்... சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் வலுக்கிறதா விரிசல்?
அவுரங்காபாத் 'பெயர் மாற்று' அரசியல்... சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் வலுக்கிறதா விரிசல்?

சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை முகலாய மன்னர் அவுரங்கசீப் கொலை செய்து அவுரங்காபாத் பகுதியில் புதைத்தார். இதனால் அவுரங்கபாத் பெயரை சாம்பாஜி நகர் என மாற்ற வேண்டும் முதன்முதலில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே குரல் கொடுத்தார். 1988-ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை அவர் எழுப்பினார். இதன்பின் 1995-ஆம் ஆண்டு இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக அவுரங்காபாத் மாநகராட்சியில் சிவசேனா ஒரு தீர்மானம் கொண்டுவந்து அதை நிறைவேற்றவும் செய்தது. ஆனால், இஸ்லாமிய வாக்குகளை கணக்கில்கொண்டு அதனை அப்போதே கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி பெயர் மாற்றத்தை தடுத்தது.

இதன்பின் அவ்வவப்போது இந்தக் கோரிக்கையை எழுப்பிய வண்ணம் இருந்தது சிவசேனா. இப்போது 20 ஆண்டுகளுக்கு பின் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு வித்திட்டவர் மகாராஷ்டிர முதல்வரும். சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே. அவர் சமீபத்தில் மத்திய சிவில் விமானத்துறை அமைச்சருக்கு, ``அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மஹாராஜ் விமான நிலையம்" என மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதினார். மேலும், அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 165 படுக்கைகள் சேர்ப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில், அவுரங்காபாத் என்பதற்கு பதிலாக சம்பாஜிநகர் என்று குறிப்பிட்டதோடு, அவுரங்காபாத்தை அடைப்புக்குறிக்குள் பதிவிட்டிருந்தார்.

இந்தச் செயல் தற்போது மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் மேலும் விரிசலை உண்டாக்கியுள்ளது. உத்தவ் தாக்கரேவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், பெயர் மாற்றும் விவாகரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், காங்கிரஸ் அதனை கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் பாலாசாகேப் தோரட், "நகரங்களின் பெயர்களை மாற்றம் செய்யும் இப்படி ஒரு திட்டம் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் குறைந்தபட்ச திட்டத்தில் சொல்லப்படவில்லை. நகரங்களின் பெயர் மாற்றுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தெளிவான நிலைப்பாடு உடன் உள்ளது. இப்போதும் எப்போதும் அதே நிலைப்பாட்டைதான் முன்வைத்து வருகிறோம்.

அந்த நிலைப்பாட்டை உத்தவ் தாக்கரேவிடம் முறையாக எடுத்து கூறுவோம். அவுரங்காபாத் பெயர் விவகாரத்தில் அரசியல் விளையாடுவதால் கூட்டணியில் பிளவு ஏற்படுகிறது. சத்ரபதி சிவாஜி எப்போதும் மதிப்புக்குரியவர். அவருடைய பெயரால் அரசியல் செய்ய வேண்டாம். அனைவரும் இணைந்து அவுரங்காபாத் முன்னேற்றத்திற்க்கு உழைப்போம்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸை போன்றே தேசியவாத காங்கிரஸும் இந்த விவகாரத்தில் சிவசேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த எதிர்ப்புகளை சிவசேனா கண்டுகொள்வதாக தெரியவில்லை. "சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை முகலாய மன்னர் அவுரங்கசீப் கொலை செய்து அவுரங்காபாத் பகுதியில் புதைத்தார். இதனால் அவுரங்கபாத் பெயரை சாம்பாஜி நகர் என மாற்ற வேண்டும் முதன்முதலில் எங்கள் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே குரல் கொடுத்தார். 1988-ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை அவர் எழுப்பினார். அவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது எங்களின் கடமை. எனவே, அதற்காக உழைப்போம்" என்று சிவசேனா எம்.எல்.சி உறுப்பினர் அம்பாதாஸ் கூறியுள்ளார்.

சிவசேனா அவுரங்காபாத்தோடு நிற்கவில்லை. அவுரங்காபாத்தை தவிர அகமதுநகர் மற்றும் உஸ்மானாபாத் ஆகியவற்றின் பெயரையும் மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது. சத்ரபதி சிவாஜியின் தாய் ஜிஜாபாய்பெயரை புனேவின் பெயராக ஜிஜானகர் என்று மாற்ற வேண்டும் என்று சம்பாஜி படைப்பிரிவு கோரியுள்ளது.

இன்னும் சில தினங்களில் மகாராஷ்டிராவில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இதை ஒரு தேர்தல் யுக்தியாக சிவசேனா எழுப்பத் தொடங்கியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

மேலும், சிவசேனாவின் இந்த கோரிக்கைகள் தனது முக்கிய வாக்காளர்களைப் பிடித்துக் கொள்ளும் முயற்சி என்றும் அவர்கள் கருதுகின்றனர். சிவசேனாவை போலவே பாஜகவும் தங்கள் கட்சி நகராட்சியை கைப்பற்றினால் பெயர் மாற்றப்படும் என அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் 'அவுரங்காபாத்' அரசியல் சித்து விளையாட்டுகளால் சிக்கி தவித்து வருகிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com