500 ரூபாய் கட்டுகளுடன் குடும்பத்தோடு செல்ஃபி; சிக்கலில் சிக்கிய உ.பி காவல் அதிகாரி
உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோவில் காவல் அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் காவல் நிலைய பொறுப்பாளராக பணியாற்று வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியே இவருக்கு எதிராக மாறியுள்ளது.
அந்த செல்ஃபியில், தனது வீட்டில் கட்டிலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் சூழ உட்கார்ந்து கொண்டு, நடுவில் 500 ரூபாய் தாள்களை பரப்பிவைத்துள்ளார் அவர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்தன. இந்நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகைப்படம் இணையத்தில் வைரலானதும் உ.பி காவல்துறை உயரதிகாரி உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இது குறித்து ரமேஷ் சந்திர சஹானி கூறுகையில், “நான் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி என் குடும்பச் சொத்தை விற்றேன். அப்போது கிடைத்த ரூ.14 லட்சத்துடன் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அது முறைக்கேடாக சம்பாதித்த பணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் காவல் நிலைய பொறுப்பாளரான ரமேஷ் சந்திர சஹானி வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை உயரதிகாரி கூறுகையில், “ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் காவல் அதிகாரி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதை காட்டுகிறது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்” எனக் தெரிவித்துள்ளார்.