அதிகாரிகளை நம்பாமல் சாலை அமைத்த பழங்குடியினர் - சோனு சூட்டின் வருகைக்காக பேனர்..!!
ஆந்திரப்பிரதேசத்தில் நடிகர் சோனு சூட்டின் வருகைக்காக, பழங்குடியினர் பேனர் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்கள் என பலருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்
அண்மையில் கூட 25,000 முகக்கவசங்களை மும்பை காவல்துறையினருக்கு வழங்கினார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக அவர் செய்து வரும் உதவிகள் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றன.இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் சலுரு பகுதியிலுள்ள கோடமா-பாரி கிராமமக்கள் நடிகர் சோனு சூட் தங்களது கிராமத்திற்கு வர வேண்டும் என்று கூறி பேனர் வைத்துள்ளனர்.
இக்கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை அமைத்துத் தர அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் அதனை புறக்கணித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தானாக முன்வந்து களத்தில் இறங்கிய அக்கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மண் சாலை அமைத்தனர்.
இதனை பார்த்த நடிகர் சோனு சூட் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி தான் விரைவில் கிராமத்திற்கு வருவதாக வாக்களித்திருந்தார். இதனைக் கேள்விப்பட்ட அக்கிராம மக்கள் சோனு சூட்டின் வருகைக்காக தங்களது கிராமத்தில் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.