ஆர்.கே.நகரில் பூத் ஏஜெண்டாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் கையாலாகாத தனத்தினால் விவசாயிகள் இங்கு வந்து போராட வேண்டி இருப்பதாக கூறினார். விவசாயிகளின் பிரச்னைகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதையே குறிக்கோளாக கொண்டிருப்பதாக தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றினால் வேளாண் பிரச்னை தீர்ந்துவிடும் என தமிழக அரசு நினைப்பதாகவும் அவர் கூறினார். மக்களை பற்றி நினைக்காமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் பூத் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
கர்நாடகா, ஆந்திராவிற்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் தமிழகத்திற்கு மட்டும் குறைவான வறட்சி நிவாரண நிதி ஒதுக்கப்படுவதாகவும் சீமான் புகார் தெரிவித்தார். கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அப்படியிருக்க மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு ஏன் தண்ணீர் கிடைப்பதில்லை. மத்திய அரசு தான் தனது பொறுப்பை உணர்ந்து இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்றார். உடனடியாக விவசாயிகளுக்கான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்களை தேச துரோகி என விமர்சித்த எச்.ராஜா குறித்துக் கேட்ட போது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய். தேசத் துரோகிகளுக்கு யாரைப் பார்த்தாலும் தேசத் துரோகியாகத்தான் தெரியும் என்று சீமான் பதிலளித்தார்.