குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
குடியரசுத் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளதால், டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக்கும் வகையில், உயரமான கட்டடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் முக்கிய இடங்களில் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.