உதவி பண்ணது குத்தமா? - லிப்ட்டில் சிக்கியவரை மீட்ட பாதுகாவலர் கன்னத்தில் பளார்
லிப்ட்டில் சிக்கிய குடியிருப்புவாசி ஐந்தே நிமிடங்களில் மீட்கப்பட்ட நிலையில் ஆத்திரத்தில் அவர் அங்கிருந்த பாதுகாவலரை கன்னத்தில் சரமாரியாக அறைந்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தி க்ளோஸ் நார்த் சொசைட்டி குடியிருப்பில் வசித்துவரும் வருண்நாத் என்பவர் லிப்ட் மூலமாக 14வது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, 'லிப்ட்' திடீரென்று பழுதாகி சில நிமிடங்கள் நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வருண்நாத் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த இண்டர்காம் மூலம் பாதுகாவலர் அசோக் என்பவரை தொடர்புகொண்டு 'லிப்ட்' கதவை திறக்குமாறு கூறியுள்ளார். உடனடியாக பாதுகாவலர் அசோக், லிப்ட் ஆபரேட்டருடன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து லிப்ட்டில் சிக்கிய வருண்நாத் ஐந்தே நிமிடங்களில் மீட்கப்பட்ட நிலையில் வெளியே வந்ததும் கோபத்துடன் அங்கிருந்த பாதுகாவலரையும் லிப்ட் ஆபரேட்டரையும் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து பாதுகாவலர் அசோக்கை தாக்கிய வருண் நாத் என்ற அந்த குடியிருப்புவாசி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சக பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதுகாவலர் அசோக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வருண்நாத் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதுகாவலர் அசோக்கை வருண்நாத் தாக்கிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.