பாதுகாப்பு என்பது ஒரு கவுரவ அடையாளம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எஸ்பிஜி எனும் சிறப்பு பாதுகாப்புப் படைச் சட்டம் கடந்த 1988ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் சிறப்பு பாதுக்காப்புப் படை உருவாக்கப்பட்டது. இவர்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ பாதுகாப்பு என்பது ஒரு கவுரவ அடையாளம் அல்ல. ஏதற்காக சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு கேட்கப்படுகிறது? இந்தச் சிறப்புப் படையின் பாதுகாப்பு பிரதமர்களின் பாதுகாப்பிற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. இதை அனைவருக்கும் கொடுக்க முடியாது. நாங்கள் எந்த குடும்பத்திற்கும் எதிராக நடந்து கொள்ளவில்லை. இதுவரை இந்தச் சட்டம் நான்கு முறை திருத்தப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் ஒரு குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டே திருத்தப்பட்டது. இந்த முறை கொண்டு வந்துள்ள திருத்தம் நேரு குடும்பத்தை மனதில் வைத்து இந்த திருத்தம் கொண்டு வரப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் இந்தச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்தச் சட்டத்திருத்த மசோதாவின்படி சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தற்போது பதவியிலிருக்கும் பிரதமர் மற்றும் அவரது இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். பிரதமர் பதவியிலிருந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவருடன் இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவியிலிருந்து விலகிய 5 ஆண்டுகள் வரை இந்த படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் 27ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.