டார்வின் கோட்பாடு தவறா? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

டார்வின் கோட்பாடு தவறா? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

டார்வின் கோட்பாடு தவறா? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

டார்வினின் பரிணாம கோட்பாடு தவறானது என்ற மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங் கருத்தால், விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங், குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறானது என்று கூறினார். மேலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை என்றும் தெரிவித்தார். பூமி உருவான காலத்தில் இருந்தே மனிதன் மனிதனாகத்தான் இருந்தான் என்று கூறிய அவர், டார்வினின் இந்த கோட்பாடு அறிவியல் பூர்வமாகவே தவறானது என்றார். மேலும் அதை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார். 

அவரது இந்த பேச்சு இந்திய விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வானியல் ஆய்வாளர் கோவிந்த் ஸ்வரூப், மத்திய அமைச்சர் கருத்து ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார். அத்துடன் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் டார்வின் கோட்பாட்டுக்கு ஆதரவு சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரின் இந்தக் கருத்தால், ஒரு விஞ்ஞானியாக தான் அதிர்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் நிபுணர் அனிகெட் சுலே கூறுகையில், “நூற்றாண்டுக்கு மேலாக கற்கால மனித பரிணாம ஆராய்ச்சிகளுக்கு, டார்வின் கோட்பாடு சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. ஒரு அமைச்சருக்கு இதுகூட தெரியாதா? என்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற அமைச்சரின் பேச்சு குறித்து மற்ற விஞ்ஞானிகளுடன் இணைந்து கையெழுத்து முகாம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். இதில் கடந்த 24 மணிநேரத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com