கழிவறையே சமையலறை - மத்திய பிரதேச பள்ளியின் அவலம்
மத்திய பிரதேசம் தாமோவில் அரசுப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக வாங்கப்படும் பொருட்கள் கழிவறையிலேயே சேமித்து வைக்கப்படுகிறது. கழிவறையில் வாசலில் மாணவர்களுக்காக உணவும் சமைக்கப்பட்டு , பின்னர் அது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை கேட்டபோது தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் , மதிய உணவு வழங்குவதற்காக சுய உதவி குழுவை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்களே இது போன்ற செயலுக்கு காரணம் என பழியை அடுத்த பக்கம் திருப்பினார்.
அமைச்சர் கோபால் பார்கவிடம் இந்த நிலை குறித்து கேட்டபோது , கழிப்பறையில் உணவுப்பொருட்கள் வைத்திருப்பது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அரசு வழங்கும் பணத்தை முறையாக பயன்படுத்தாமல் ஊழல் செய்வதன் விளைவாக இதனை பார்க்க முடிகிறது என்று தெரிவித்தார். மேலும் இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மற்ற இடங்களிலும் இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.