பள்ளிக் குழந்தைகளின் சீருடைகளை கைத்தறி ஆடைகளாக மாற்ற வேண்டும் - சத்குரு ஜகி வாசுதேவ்

பள்ளிக் குழந்தைகளின் சீருடைகளை கைத்தறி ஆடைகளாக மாற்ற வேண்டும் - சத்குரு ஜகி வாசுதேவ்
பள்ளிக் குழந்தைகளின் சீருடைகளை கைத்தறி ஆடைகளாக மாற்ற வேண்டும் - சத்குரு ஜகி வாசுதேவ்

”பள்ளிக் குழந்தைகள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதன் மூலம் கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவிக்க முடியும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் ’ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் ஈஷா நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவுடன்  கலந்துரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி  சத்குருவுடன் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) ஆன்லைன் மூலம் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் சத்குரு பேசுகையில், “நான் இயந்திரங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ எதிரானவன் இல்லை. ஆனால், அதேசமயம், மனிதர்களின் கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களுக்கு தனித்துவமான கலைநயமும், அழகுணர்ச்சியும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவை மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருப்பதை நாம் உணர வேண்டும்.

பள்ளிகள், சுற்றுலா மற்றும் விமானத்துறைகளில் கைத்தறி ஆடைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்க முடியும். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதற்கு அரசு தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். இப்போது, குழந்தைகள் பாலிஃபைபரால் ஆன சீருடைகளைத் தான் அணிகின்றனர். இறந்த மீன்களை பதப்படுத்த பாலிஃபைரை பயன்படுத்தலாம். ஆனால், உயிர் துடிப்போடு வளரும் குழந்தைகள் அதை அணியக் கூடாது. அது மிகப்பெரிய குற்றம். பாலிஃபைபர் துகள்கள் தோல் வழியாக உடலினுள் புகுவதால் உடலளவிலும் மனதளவிலும் மற்றவர்களை விட குழந்தைகள் எளிதில் பாதிக்கப்பட்டுவார்கள் .

நம் பாரத தேசத்தில் இருப்பதை போன்று விதவிதமான பாரம்பரிய ஆடை ரகங்கள் வேறு எந்த தேசத்திலும், கலாச்சாரத்திலும் இல்லை. ஒரு காலத்தில், ஆடை ஏற்றுமதியில் உலகின் முன்னணி தேசமாக நாம் இருந்தோம். அந்த பெருமையை நாம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். விவசாயத்திற்கு அடித்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இது உள்ளது. மேலும், கரும்புச்சக்கை, வாழைநார் மற்றும் சணல் பயன்படுத்தியும் இயற்கை இழை ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது” என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

சத்குருவின் பல்வேறு ஆலோசனைகளை வரவேற்று ஆமோதித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி  பேசுகையில், “நவீன சந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்துவது தான் உண்மையான சவாலாக இருக்கிறது. இதற்காக, நாங்கள் பிபா, அரவிந்த் மில்ஸ் போன்ற மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் நெசவாளர்களிடம் இருந்து நேரடியாகவே ஆடைகளை கொள்முதல் செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

எங்கள் துறையின் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1,300 கோடியை அரசு முதலீடு செய்துள்ளது. இன்னும் பல விஷயங்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. கைத்தறி ஆடைகளை நன்றாக வடிவமைப்பது மட்டுமின்றி நல்ல விலையில் அவை மக்களுக்கு கிடைக்கவும் விரும்புகிறோம். இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படியான விலையை உறுதி செய்வதன் மூலம் ஒரு பெரும் சந்தை வாய்ப்பை நம் கைத்தறி நெசவாளர்களுக்குக் உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com