பள்ளிப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லியில் உள்ள நாராயணா என்ற பகுதியில் கேந்திரியா வித்யாலயா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் பேருந்து, சுமார் 30 மாணவர்களுடன் இன்று சென்று கொண்டிருந்தது. தவ்லா கான் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, பேருந்தில் திடீரென்று தீப் பிடித்தது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் பேருந்து மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தீ பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.