விஜய தசமி நாளில் புத்த மதத்துக்கு மாறிய ஆயிரக்கணக்கான பட்டியலின மக்கள்.. பின்னணி என்ன?

விஜய தசமி நாளில் புத்த மதத்துக்கு மாறிய ஆயிரக்கணக்கான பட்டியலின மக்கள்.. பின்னணி என்ன?
விஜய தசமி நாளில் புத்த மதத்துக்கு மாறிய ஆயிரக்கணக்கான பட்டியலின மக்கள்.. பின்னணி என்ன?

அம்பேத்கரின் கொள்கை வழியை பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று புத்த மதத்துக்கு மாறி வரும் நிலையில் இந்த வரும் கொஞ்சம் கூடுதலாக மதமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. அதுதொடர்பாக செய்திகளும் பரவலாக வெளியாகி வருகிறது. 

“நான் ஒரு இந்துவாகப் பிறந்திருக்கலாம்; ஆனால், இந்துவாக இறக்க மாட்டேன்'' என்று சூளுரைத்த டாக்டர் அம்பேத்கர், சாதிய இழிவுகள் மற்றும் தீண்டாமையை எதிர்த்து, 1956இல் விஜயதசமி நாளான அக்டோபர் 14 அன்று பல லட்சம் பேருடன் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்துக்கு மாறினார். அந்த வரிசையில் இந்த ஆண்டும் விஜயதசமி நாளன்று இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் புத்த மதத்துக்கு மாறினர். அவர்களின் பெரும்பாலானோர் பட்டியலின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புராவில் கேல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ஹூனசாகி கிராமத்தை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். இந்த கிராமம் உள்பட வேறு சில கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் நீண் டகாலமாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சட்ட மாமேதை அம்பேத்காரை பின்பற்றி அவர்கள் புத்த மதத்துக்கு மாற முடிவு செய்தனர். அதன்படி கோல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை சார்பில் அக்டோபர் 14ல் விழா ஏற்பாடு செய்தது. இதையடுத்து 500க்கும் அதிகமான பட்டியலின மக்கள் இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்துக்கு தீக்சை பெற்றனர்.

அப்போது சிலர் தங்கள் வீட்டில் இருந்த இந்து தெய்வங்களின் போட்டோக்களை எடுத்து கிருஷ்ணா நதியில் வீசினர். இதுபற்றி அறக்கட்டளையின் தலைவரான வெங்டேஷ் ஒசமணி கூறுகையில், ‛‛நாங்கள் குடும்பத்துடன் புத்த மதத்தை தழுவினோம். இதனால் வீட்டில் இருந்த சாய்பாபா, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் படம், சிலைகளை ஆற்றில் கரைத்துள்ளோம்'' என்றார். கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், அங்கு நடந்த இச்சம்பவம் பெரும் விவாதத்துக்குள்ளாகி உள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹள்ளியில் பூதம்மா கோவிலில் சாமி ஊர்வலம் நடந்தது. பட்டியலின சிறுவன் ஒருவர் சாமி சிலையை தொட்டது சர்ச்சையானது. இதையடுத்து கிராம மக்கள் குடும் எதிர்ப்பு தெரிவித்து சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது சர்ச்சையான நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த சாமி சிலைகளை அகற்றிவிட்டு அம்பேத்கார் படத்தை வைத்து வழிபட தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது யாதகிரி மாவட்டத்தில் 500 பட்டியலின மக்கள் அம்பேத்காரை பின்பற்றி புத்த மதத்துக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கடந்த விஜயதசமி அன்று டெல்லி டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தை தழுவினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதிமொழியை வாசித்த டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், ''எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை. எனவே அவர்களை நான் வழிபட மாட்டேன். கடவுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால், அவர்களையும் நான் வழிபட போவது இல்லை. விஷ்ணுவின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்'' என்றார்.

டெல்லி அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதோடு சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை பற்றியே நான் பேசினேன். ஆனால், பாஜகவினரோ எனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை பரப்புகின்றனர் என கூறியிருந்தார். பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் விமர்சனங்களை எழுப்பி வந்த நிலையில் ராஜேந்திர பால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

புத்த மதத்துக்கு மாற விஜயதசமி நாள் ஏன்?    

மௌரிய வம்சத்தில் பிறந்த மாமன்னரான அசோகர், கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். அசோகர் அவ்வாறு புத்த மதத்துக்கு மாறிய நாள் எதுவென்றால் அது விஜயதசமி நாளன்றுதான். இதனால்தான் அசோகர் புத்த மதத்துக்கு மாறிய நாளை 'அசோக விஜயதசமி' என்று புத்த மதத்தினர் அழைப்பர். நேபாளத்தில் உள்ள புத்த மதத்தினர் இந்நாளை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.

அந்தவகையில் மாமன்னர் அசோகர் மீது மிகப்பெரிய மரியாதையைக் கொண்டிருந்த அம்பேத்கர், விஜயதசமி நாளன்று புத்த மாதத்துக்கு மாறினார். இதன் நீட்சியாகவே அம்பேத்கரின் கொள்கை வழியை பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று புத்த மதத்துக்கு மாறி வருகின்றனர்.

இதையும் படிக்க: மியவாடியில் சிக்கிய தமிழக இளைஞர்கள்.. மியான்மரில் போர் மூளும் சூழல்! வரலாறு சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com