ப்ளுவேல் போன்ற ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய இயலாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
ப்ளுவேல் விளையாட்டை ஆன்லைனில் விளையாடி, பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சினேகா கலிடா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்யாதது ஏன் என கேட்டு மத்திய அரசு பதிலளிக்கக் கூறியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, புளூ வேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய இயலாது என்றும் ஏனென்றால் அவை ஆப்ஸ் சார்ந்த விளையாட்டுக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், ’வாழ்க்கையின் அழகையும் புளு வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளின் பயங்கரத்தையும் பள்ளிக் குழந்தைகள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இதில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.