மோடிக்கு எதிரான கோத்ரா கலவர வழக்கு ஜனவரியில் விசாரணை
கோத்ரா கலவர வழக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குஜராத்தின் கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து கொளுத்தப்பட்டதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு, கலவரத்தில் நரேந்திர மோடிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது.
சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை எதிர்த்து, கோத்ரா கலவர பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும், அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு அதில் பங்குண்டு எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கோத்ரா கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி ஜப்ரி என்பவரின் மனைவி ஜகியா குரஜாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். ஆனால், இவரது மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனையடுத்து, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜகியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், மனு தாரர் ஜகியா சார்பில் மூத்த வழக்கறிஞர் சியு.சிங்கும் ஆஜராகினர். அப்போது, ஜனவரி மூன்றாம் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.