68 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்தில் கடந்த 68 ஆண்டுகளில் முதன் முறையாக, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து நாளை மறுநாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதி பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் இதுவரை மொத்தம் 7 பெண் நீதிபதிகளே பணியாற்றியிருக்கிறார்கள். 1989ம் ஆண்டு முதல் பெண் நீதிபதியாக ஃபாத்திமா பீவி நியமனம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, சுஜாதா மனோகர், ருமா பால், ஜியான் சுதா மிஸ்ரா, ரன்சனா பிரகாஷ் தேசாய், பானுமதி, இந்து மல்கோத்ரா ஆகியோர் பெண் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண் நீதிபதிகள் தனி ஒருவராக தான் அமர்வில் இருந்துள்ளனர். 2011ம் ஆண்டிற்கு பிறகு அதில் மாற்றம் ஏற்பட்டது. முதன் முறையாக நீதிபதி மிஸ்ராவுடன், நீதிபதி தேசாய் ஒன்றாக பணி புரிந்தார். தற்போது அந்த நிலையும் மாறி ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றவுள்ளார்கள். இந்திரா பானர்ஜி நியமனத்தால் 68 ஆண்டுகளுக்கு இது சாத்தியமாகியுள்ளது.