எஸ்.சி, எஸ்.டி தடுப்பு சட்டம் - நாடு முழுவதும் வெடித்த போராட்டங்கள்
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. வட மாநிலங்களில் வன்முறை மூண்டுள்ளது. தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வட மாநிலங்கள் பலவற்றில் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள இப்போராட்டத்தை ஒட்டி உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலித் அமைப்பினர் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பஞ்சாப் அரசு இன்று இரவு 11 மணி வரை மொபைல் ஃபோன் சேவை தடை செய்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினரால் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு, உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சட்டப்பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்யும் என தலித் அமைப்புகள் கூறுகின்றன.