மதுக்கடைகள் எங்கே இருக்கலாம்?: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் எவ்வளவு தூரம் இருக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகமான விபத்து ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுபான கடைகள், பார்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த தொலைவை 100 மீட்டராகக் குறைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் 20 ஆயிரம் பேருக்கு கீழ் மக்கள் வசிக்கும் இடங்களில், நெடுஞ்சாலையில் இருந்து 220 மீட்டர் தூரத்தில் மதுக்கடை இடம் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், முன்பு விதிக்கப்பட்டிருந்த 500 மீட்டர் தூரத் தடை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் 220 மீட்டர் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு விதிக்கப்பட்டிருந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது. மற்ற மாநிலங்களுக்கு இந்தக் காலக்கெடு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு சில்லறை மதுபான கடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற கருத்து இருந்தது. பார்கள், பப்புகளில் மதுபானங்கள் விற்கலாமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர். அதன்படி இந்த 220 மீட்டர் தொலைவிற்குள் சில்லரை மதுக்கடைகள் மட்டுமின்றி, பார்கள், பப்புகள், ஹோட்டல்களில், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் மதுபானங்களை விற்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.