ம.பி அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ம.பி அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்web

’மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு..’ பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியை விமர்சித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எதிர் தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தியது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்ற பதற்றமான சூழலை ஏற்படுத்திய நிலையில், பின்னர் தாக்குதல் நிறுத்தம் என இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான அனைத்து இராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர்.

இந்நிலையில் பாகிஸ்தானை விமர்சிக்கும் விதமாக ராணுவ அதிகாரி கர்னல் சோபியாவை வைத்து கருத்து தெரிவித்த மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்..

இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோவ் அருகே உள்ள மண்பூர் நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டே உங்களுக்கு பாடம் கற்பித்துள்ளோம்.” என்று பேசினார்.

இவருடைய பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சை தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் எனவும், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்தார்.

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..

பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியதை கண்டித்து , மத்திய பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதான அவதூறு கருத்துக்கு தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் முறையீடு செய்தார்.

இந்த சூழலில் அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாஜக அமைச்சர் அவதூறாக பேசிவிட்டு தற்போது அவர் மன்னிப்பு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ”ராணுவ அதிகாரி சோபியாவை விமர்சித்த விவகாரத்தில் ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் மிக மோசமாக பேசிவிட்டு, தற்போது வழக்கில் இருந்து விடுபடுவதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறுவதை ஏற்க முடியாது. மன்னிப்பு கோர அருகதை இல்லாத பேச்சை அமைச்சர் விஜய் ஷா பேசியிருக்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com