நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு ‘நீட்’, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. மனுவில், நீட் தேர்வு வினாத்தாள் மாநிலத்துக்கு மாநிலம் முரண்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதை அவரச வழக்காக எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், இதை உடனே விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. நீட் தேர்வு முடிவை வெளியிட ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவசர வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.