'10 நாட்களுக்குள் முடியலனா 240 மணி நேரத்தில் முடிச்சிடுங்க' சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் நக்கல் !

'10 நாட்களுக்குள் முடியலனா 240 மணி நேரத்தில் முடிச்சிடுங்க' சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் நக்கல் !

'10 நாட்களுக்குள் முடியலனா 240 மணி நேரத்தில் முடிச்சிடுங்க' சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் நக்கல் !
Published on

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்வேறு முக்கிய பொறுப்புகளை பதவி வகித்து வரும் அலோக் வர்மா, கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார். 2016 டிசம்பரில் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா அப்போது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஜனவரியில் அலோக் வர்மா ஓய்வுப் பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

ராகேஷ் அஸ்தானா மீது தொடக்கத்தில் சில ஊழல் புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டி, அவருக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவி வழங்க அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். சிபிஐயின் இயக்குநராக இருக்கும் அலோக் வர்மா, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை தடுக்க முயற்சிப்பதாக சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தார். இருவரும் பரஸ்பரம் புகார்களை தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, பனிப்போரில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

(அலோக் வர்மா)

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணண் கோரிக்கை வைத்தார். குற்றச்சாட்டு ஆரம்ப நிலையில் இருக்கும் போது விடுப்பு கொடுக்கப்பட்டது, சட்டப்படி தவறு என வாதிடப்பட்டது. மேலும் அதிமுக்கியமான வழக்குகளை அலோக் வர்மா விசாரித்து வரும் நிலையில், அவரை பணி செய்யவிடாமல் தடுத்தால் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகும் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சய் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ’சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்’ என்று கூறினர். அப்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர், ’10 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பது கடினம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, ‘சரி, 240 மணி நேரம் தருகிறோம், முடித்துவிடுங்கள்’ என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும், ’பொறுப்பு இயக்குநர் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது; நிர்வாக விவகாரங்களை மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com