அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து, நீதிபதி யுயு லலித் திடீரென விலகியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சரிசமமாக பங்கிட்டுக்கொள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் வந்தபோது, ஜனவரி முதல் வாரம் புதிய அமர்வு இதை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, என்.வி ரமணா, யுயு லலித், சந்திரசூட் ஆகியோ ரை கொண்ட அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, எப்போது முதல் விசாரிக்கப்படும் என்பதை இன்று அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, வழக்கின் விசாரணை வரும் 29 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
(யுயு லலித்)
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் விலகியுள்ளார். அயோத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டி ருந்த கல்யாண் சிங்குக்கு ஆதரவாக, 1997 ஆம் ஆண்டு யுயு லலித் வழக்கறிஞராக செயல்பட்டார். அதை சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்த அமர்வில் இருந்து அவர் தன்னை விடுவித்துள்ளார்.