சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய முடியும் என்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த வருடம் அளித்தது. இதனையடுத்து இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. தீர்ப்புக்கு ஆதரவாக பல பெண்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அவர்கள் கடுமையான எதிர்ப்பின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக கேரள அரசு அறிவித்தது. பல இடங்களில் கலவரங்களும் நடைபெற்றன.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பில் மறு ஆய்வு கோரும் மனுக்களின் மீதும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அறிவிக்கிறது.