எம்.பி, எம்.எல்.ஏ சொத்துக்களை கண்காணிக்க நிரந்தர நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்

எம்.பி, எம்.எல்.ஏ சொத்துக்களை கண்காணிக்க நிரந்தர நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்

எம்.பி, எம்.எல்.ஏ சொத்துக்களை கண்காணிக்க நிரந்தர நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்
Published on

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வருமானத்தின் ஆதாரத்தையும், மனைவி மற்றும் பிள்ளைகளின் வருமானத்தையும் கட்டாயம் வேட்புமனுத் தாக்கலின்போது குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக எம்.பி., எம்எல்ஏக்கள் சொத்து குவித்திருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

லோக் பிரஹாரி எனும் அரசு சாரா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத் தாக்கலின்போது தங்களின் சொத்துகள், மனைவி, பிள்ளைகளின் சொத்துகளை மட்டும் கணக்கில் காட்டுகிறார்கள் என்றும் ஆனால் இந்த சொத்துகள் எப்படி வந்தது, அதற்கான ஆதாரம் என்னவென்பதை குறிப்பிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தது. எனவே இனி வரும் காலங்களில் இந்தத் தகவல்களையும் வேட்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேட்புமனுவில் தன்னுடைய சொத்து, மனைவி மற்றும் பிள்ளைகளின் சொத்துகளை கணக்கில் காட்டும்போது, அந்த சொத்துகள் சம்பாதிக்கப்பட்ட விதம், அதற்கான வருமானம் வந்த விதம், அந்த வருமானத்தை ஈட்டியதற்கான ஆதாரம் ஆகியவற்றையும் வேட்பாளர் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டது. 

மேலும் பதவியில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துகளை கண்காணிக்க மத்திய அரசு நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருந்தது தெரியவந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com