சாரதா சிட்பண்ட் வழக்கில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு திக்கித் திணறிய சிபிஐ

சாரதா சிட்பண்ட் வழக்கில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு திக்கித் திணறிய சிபிஐ
சாரதா சிட்பண்ட் வழக்கில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு திக்கித் திணறிய சிபிஐ

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிரான சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் ஆதாரத்தை கோரியுள்ளது.

சாரதா நிதி நிறுவனம் மேற்கு வங்கத்தில் 239 தனியார் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தங்கள் திட்டங்களில் முதலீடு செய்தால்‌ பெரும் லாபம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கா‌ன சாமானிய மக்களிடம் இருந்து பெரும் தொகையை சாரதா நிறுவ‌னம் வசூலித்தது. அவ்வாறு சுமார் 17 லட்சம் பேரிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய நிலையில், அதன் முறைகேடுகள் 2‌013ம் ஆண்டு அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து நிறுவனமே மூடப்பட்டது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த மோசடியை விசாரிக்க முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையராக இருக்கும் ராஜிவ் குமார் தலைமையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அப்போது சிறப்பு விசாரணைக் குழுவை உடனடியாக அமைத்தது. சாரதா நிறுவன தலைவர் சுதிப்தோ சென் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா, முன்னாள் டிஜிபி ரஜத் மஜும்தார், எம்பிக்கள் இருவர் ஆகியோர் கைது‌ செய்யப்பட்டனர். இந்த வழக்கினை விசாரித்த ராஜிவ் குமார், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும் முக்கிய ஆவணங்களை அழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2014ம் ஆண்டு சிபிஐ வசம் சென்றது. 

இதையடுத்து மேற்க வங்க காவல்துறை மற்றும் சிபிஐ இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறை ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து சிபிஐ மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து காவல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அதன்பின்னர் ராஜிவ்குமார் ஆதாரங்களை அழித்தார் என சிபிஐ தரப்பில் ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மேதா, “சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராக ராஜிவ் குமார் இருந்தார். அந்தச் சமயத்தில் தான் லேப்டாப்கள், செல்போன்கள் என பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரை சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராக நியமித்தது மேற்கு வங்க அரசுதான். எனவே அவர் ஆதாரங்களை அழித்திருக்க வாய்ப்புள்ளது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் அல்லது கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் என்பதால் அந்த ஆதாரங்களை அவர் கைப்பற்றி விசாரணை நடத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதிலிருந்து செல்போன் பேசிய  ஒரு ரெகார்டை அழித்தார் என்ற ஆதாரத்தையாவது நீங்கள் காட்டுங்கள். அல்லது மோசடியில் அவருக்கு தொடர்பிருக்கிறது என சிறிய ஆதாரத்தையாவது காண்பித்து எங்களை திருப்தி படுத்துங்கள். மேலும், இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துங்கள். வெறும் வாக்குமூலங்களை கூறி ஆதாரம் என்றால் ஏற்கமுடியாது. சரியான ஆதாரத்தை தாக்கல் செய்யுங்கள்” என்று கூறினார். மேலும் மே 1ஆம் தேதி (நாளை)க்குள் சிபிஐ ஆதாரங்களை தாக்கல் செய்யவும் கால அவகாசம் கொடுத்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com