அப்பாவி பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை திரும்பப் பெற்றது உச்சநீதிமன்றம்..!
10 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர், குற்றவாளிகள் இல்லை என்பது தற்போது நிரூபணமானதால் தண்டனை திரும்ப பெறப்பட்டு, வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 2003-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்டது, கொள்ளை மற்றும் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய வழக்கில் பழங்குடியினர் 6 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட போது 2009-ஆம் ஆண்டு 6 பேருக்கும் மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்து, இதில் தொடர்பே இல்லாத 6 பேரை காவல்துறையினர் வழக்கில் சிக்க வைத்தது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து 6 பேருக்கும் விதித்த மரண தண்டனையை திரும்பப்பெற்ற உச்சநீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்த 6 பேருக்கும் , மகாராஷ்டிரா அரசு 4 வாரங்களுக்குள் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் அப்பாவி பழங்குடியின மக்களை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.