நீதிபதியாவதற்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மீண்டும் எதிர்ப்பு!
நீதிபதி ஆவதற்கான தகுதித் தேர்வை எழுதுபவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதற்கு இளம் சட்ட பட்டதாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச பார் கவுன்சிலில் பதிவுசெய்த இளம் வழக்கறிஞர் சந்திரசேன் யாதவ் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவில், இந்த மூன்று வருட கட்டாய வழக்கறிஞர் பணி விதியை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்துவது தனது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். இந்த விதி 2027க்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போதுதான் தற்போதைய பட்டதாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வழக்கறிஞரிடம் இருந்து பயிற்சி சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியும் சட்ட சர்ச்சை ஆகியுள்ளது. 10க்குக் குறைவான ஆண்டு அனுபவம் கொண்ட வழக்கறிஞர்களிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பயிற்சி பெற்றவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்று அஞ்சப்படுகிறது.