வீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ!
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது.
பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று பிரதமர் மோடி கூறிவிட்டார். தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களில் 23 பேர், எஸ்.பி.ஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். அவர்களின் கடன்களை அந்த வங்கி உடனடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. அதோடு அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால் காப்பீடுத் தொகையாக ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி எஸ்.பி.ஐ வங்கியின் சேர்மன் ரஜினிஷ் குமார் கூறும்போது, ‘’நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் துணை நிற்கும் வீரர்களின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது. பெரும் இழப்பை சந்தித்துள்ள வீரர்களின் குடும்பத்தைக் காக்க வேண்டியது நம் கடமை. வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வங்கி செய்யும் சிறிய உதவி இது’’ என்று தெரிவித்துள்ளார்.