குறைந்தபட்ச இருப்பு தொகை குறைப்பு: எஸ்பிஐ அறிவிப்பு
ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு பிடிக்கப்படும் அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல், குறைந்தபட்ச இருப்புத் தொகையில் இருந்து எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். 50 சதவீதம் முதல் 75 சதவீத பற்றாக்குறை இருந்தால் 75 ரூபாயுடன் கூடுதல் வரி, 50 சதவீதத்துக்கு கீழ் பற்றாக்குறை இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் ரூ.20 முதல் 50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என இருந்தது.
இந்நிலையில், வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவை ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. பெரு நகரங்கள், நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 3,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு நகரங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில்1,000 ரூபாய் குறைந்தபட்ச தொகையாக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கான அபராதத் தொகை 20-50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், மைனர்களின் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.