மல்லையாவின் ரூ.963 கோடி மதிப்பு சொத்துக்கள் ஏலம்..!
தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ரூ.963 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஸ்டேட் வங்கி ஏலத்திற்கு விட்டுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவிற்கு கடனை பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால் பல வங்கிகள் விஜய் மல்லையா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் மத்திய அரசு முடக்கியது. இதனிடையே கடன்மோசடி வழக்கில் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்ததால் அவரை தேடப்படும் குற்றவாளியாகவே நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மல்லையா பெற்ற கடனுக்காக அவரின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.963 கோடி பணத்தை எஸ்பிஐ மீட்டுள்ளது. விஜய் மல்லையாவுக்கு இந்தியாவில் சொந்தமாக உள்ள சொத்துக்களை ஏலம்விட்டு பணம் பெற்றதாக எஸ்பிஐ மேலாண்மை இயக்குநர் அரிஜித் பாசு கூறியுள்ளார்.
‘மல்லையாவுக்கு எதிராக பிரிட்டன் அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்லது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் எங்களது பணத்தை மீட்டுவிடுவோம்’ என்று அவர் கூறினார்.
வட்டியுடன் சேர்ந்து ரூ9,863 கோடி பணம் எஸ்பிஐ-க்கு செலுத்த வேண்டியுள்ள நிலையில், தற்போது ரூ.963 கோடி மட்டும் மீட்கப்பட்டுள்ளது.