ஒரே பெயர் கொண்ட இருவருக்கு ஒரே வங்கிக் கணக்கு.. குழப்பம் செய்த எஸ்.பி.ஐ
பாரத ஸ்டேட் வங்கி, ஒரே பெயர் கொண்ட இருவருக்கு ஒரே வங்கி கணக்கு எண் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் அலாம்பூர் பகுதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில், ஹூக்கும் சிங் என்ற ஒரே பெயர் கொண்ட இருவர் தனித் தனியாக வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர். ஒருவர் ரூரை கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் ரௌனி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களில் ரூரை கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங், தனது வங்கிக் கணக்கில் பணத்தை தொடர்ந்து செலுத்தி வந்துள்ளார். அதே வங்கி கணக்கிலிருந்து ரௌனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரூரை கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங், தனது வங்கிக் கணக்கை பார்த்தபோது தான் தொடர்ச்சியாக வங்கிக் கணக்கில் செலுத்தி வந்த பணம் அதிகமான அளவில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வங்கி அதிகாரி தவறுதலாக ஒரே பெயர் கொண்ட இருவருக்கும் ஒரே வங்கி கணக்கு எண் அளித்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வங்கி மேலாளர் ராஜேஷ் சோன்கர், “எங்கள் வங்கியானது, ஒரே பெயர் கொண்ட இருவருக்கும் ஒரே வங்கிக் கணக்கு எண் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக ஒருவர் இந்தக் கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். மற்றொருவர் இந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வந்துள்ளார். இதனால் தான் இந்த தவறு கண்டுபிடிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரௌனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங், “என்னுடைய வங்கி கணக்கில் பிரதமர் மோடி தான் பணம் செலுத்துகிறார் என்று எண்ணி அந்தப் பணத்தை நான் எடுத்து செலவு செய்தேன். இது வங்கி ஊழியர்கள் செய்த தவறு” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல ரூரை கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங், “இந்த வங்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நான் கணக்கை தொடங்கினேன். அப்போது முதல் நான் தொடர்ந்து வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி வருகிறேன். கடந்த மாதம் நான் நிலம் வாங்கலாம் என்பதற்காக என்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய வங்கி கணக்கிலிருந்து 89ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

