உச்சநீதிமன்றம் சொன்னபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்த எஸ்.பி.ஐ.!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. அளித்தது.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.ட்விட்டர்

தேர்தல் பத்திரத்தை சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக இற்றப்பட்ட சட்ட திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க மேலும் நான்கு மாத காலம் அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.பி.ஐயின் இந்த கால அவகாச நீட்டிப்பு கோரிக்கையானது, மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு விவரங்களை வெளியிடும் வகையில் இருந்தது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்ட்விட்டர்

இந்த நிலையில், இம்மனு நேற்று (மார்ச் 11) விசாரணை நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ‘வங்கி செயல்படக்கூடிய நேரத்திலேயே, அதுவும் நாளைக்குள் (மார்ச் 12), கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் யார்யாரிடத்தில் இருந்து எவ்வளவு தொகையை பெற்றன, நன்கொடையாளர் யார் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15க்குள் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டதுடன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. அளித்தது. இதனால், எஸ்.பி.ஐ அளித்த விவரங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நாளையே தேர்தல் ஆணையம் வெளியிடுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே எஸ்.பி.ஐ. வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர், ‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதிக்கக்கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com