ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மரணம்: யார் இந்த சத்யபால் மாலிக்? இவ்வளவு விஷயங்கள் பேசியிருக்கிறாரா?
சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜம்மு-காஷ்மீர் (ஜே&கே) முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக், தனது 79ஆவது வயதில் இன்று (ஆக.5) காலமானார். இந்த தகவலை அவரது தனிப்பட்ட செயலாளர் கே.எஸ்.ராணா உறுதிப்படுத்தியுள்ளார். இதே நாளில்தான் (ஆக.5, 2019), ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்புவரை, அதாவது ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தவரை (ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை) அம்மாநிலத்தின் கடைசி ஆளுநராகப் பணியாற்றியவர் சத்யபால் மாலிக். இவர், தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கோவா, பீகார், மேகாலயா மற்றும் ஒடிசாவின் ஆளுநர் பதவிகளையும் வகித்துள்ளார்.
யார் இந்த சத்யபால் மாலிக்?
1965-66ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த சத்யபால் மாலிக், 1966-67இல் மீரட் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகவும், பின்னர் 1968-69இல் அப்போதைய மீரட் பல்கலைக்கழகத்தின் (இப்போது சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம்) மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு பாக்பத் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய கிராந்தி தள வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவர் சட்டமன்ற உறுப்பினராக அறிமுகமானார். பின்னர் அவர் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டு, சத்யபால் மாலிக் காங்கிரஸில் சேர்ந்தார். 1986ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சத்யபால் மாலிக் உத்தரப் பிரதேச காங்கிரஸ் குழுவின் (UPCC) பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இருப்பினும், போஃபர்ஸ் ஊழல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, 1987ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை இரண்டிலிருந்தும் அவர் ராஜினாமா செய்தார். அதே ஆண்டில், அவர் 'ஜன் மோர்ச்சா'வை உருவாக்கினார். பின்னர் அது 1988இல் ஜனதா தளத்துடன் இணைக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், அவர் முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்குடன் நெருக்கமாகப் பணியாற்றினார் மற்றும் ஜன்-ஜாக்ரன் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1989இல் அலிகாரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு, சத்யபால் மாலிக் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேர்ந்து பாக்பத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். உத்தரப் பிரதேச பாஜகவின் துணைத் தலைவராகவும் (2005-06), பாஜக கிசான் மோர்ச்சாவின் அகில இந்தியப் பொறுப்பாளராகவும் (2009) பணியாற்றினார். பின்னர் 2012இல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார். பொது வாழ்வில் அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2017ஆம் ஆண்டு பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அடுத்து ஒரு வருடம் கழித்து, ஆகஸ்ட் 23, 2018 அன்று, ஜம்மு காஷ்மீர் ஆளுநராக அவர் பதவியேற்றார். அக்டோபர் 2019 வரை அவர் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் தான் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது.
மறைந்த சத்யபால் மாலிக், மத்திய அரசு மீது பல்வேறு விஷயங்களில் விமர்சனங்களையும் முன் வைத்து வந்தார். குறிப்பாக இரண்டு விஷயங்களை சொல்லலாம். ஒன்று புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து முக்கியமான கருத்தினை வெளியிட்டு இருந்தார். பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி இருந்தார்.
புல்வாமா தாக்குதல் குறித்து அப்போது பேசியிருந்த சத்யபால் மாலிக், “ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் இத்தனை பெரிய அணிவகுப்பாக வந்திருக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றிருந்தால் தாக்குதல் சாத்தியப்பட்டிருக்காது. ஆனால், சில இடங்களில் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. சரியான சோதனைகள் இருந்திருந்தால் வெடிபொருட்களுடன் ஒரு கார் வந்திருக்கவே முடியாது. உண்மையாகவே இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறோம்” என்று வெளிப்படையாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பேசியிருந்தார். அதன்பிறகு ராகுல் காந்தி உடனான நேர்காணலிலும் புல்வாமா தாக்குதல் குறித்து விரிவாக பேசியிருந்தார்.
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் இருந்த போது விவசாயிகள் போராட்டம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்பொழுது இதுகுறித்து அவர், ''பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறினேன். அதற்கு பதிலளித்த மோடி, 'அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?'' என்றார். அதற்கு நான் ''நீங்கள்தான் இந்தியாவின் பிரதமர் எனக் கூறினேன். இறுதியாக நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன். பின்னர், அவர் என்னிடம் அமித் ஷாவை சந்திக்குமாறு கூறினார். நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது, 'அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள்'' என கூறியதாக தெரிவித்தார்.
சத்யபால் மாலிக்கின் பேச்சு அப்பொழுது அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.