தண்ணீர் தட்டுப்பாட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள முக்கிய காரணிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்பு தாபோய் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், நீர் பாசனத்துறையில் தங்களின் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியமைக்காக சர்தார் வல்லபாய் படேலையும், அம்பேத்கரையும் நினைவுக்கூற வேண்டும் என அவர் தெரிவித்தார். சர்தார் சரோவர் அணை திட்டத்தை தொடங்கியபோது பல்வேறு தடைகள் வந்ததாகவும், ஆனால் திட்டத்தை முடிப்பதில் அரசு திடமாக இருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையின் உயரம் சமீபத்தில் 138 புள்ளி 68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி அடையும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுவர்.