ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற மோடி.. சர்ச்சையாய் பேசிய சஞ்சய் ராவத்.. பதிலடி கொடுத்த ஃபட்னாவிஸ்!
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றிருந்தார். பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர், அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதல்முறையாக ஆர்ஆர்எஸ் தலைமை அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “கடந்த 10-11 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது சென்றுள்ளார். அவருடைய ஓய்வு விண்ணப்பத்தை அளிக்க அவர் அங்கு சென்றிருக்கலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த நாட்டின் தலைவரை மாற்ற விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியின் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பாஜகவிற்கும் அடுத்த தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அதன்படி அடுத்த பிரதமரை ஆர்எஸ்எஸ்தான் தேர்வு செய்யும். அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இதுகுறித்து விவாதிக்காகவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அவருடைய இந்தக் கருத்து அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்குப் பதில் கொடுத்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ”2029 ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் ஆவார். பாஜக தனது வாரிசைத் தேட வேண்டிய அவசியமில்லை. அவர் எங்கள் தலைவர். அவரே மீண்டும் தொடர்வார்” என்று கூறியுள்ளார்.