“முதலமைச்சர் பதவி குறித்து மட்டுமே பாஜகவுடன் பேச்சு” - சிவசேனா
முதலமைச்சர் பதவி குறித்து மட்டுமே பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்கள் ஆகிவிட்டபோதிலும், அங்கு புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில்? பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகள் இடையிலான முரண் இன்னும் நீடிக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராவத், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் முட்டுக்கட்டை நீடிப்பதாகவும், அரசு அமைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி குறித்து மட்டுமே இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சஞ்சய் ராவத் உறுதிபடக் கூறினார். மேலும் சிவசேனாவுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை 175 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.