ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடியுங்கள்: சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் ராணுவ வீரர்களுக்கு ஊழியர்கள் சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்க பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் கடந்து செல்லும்போது அவர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடியில் உள்ள சீனியர் அதிகாரிகள்தான் ராணுவ வீரர்களின் அடையாள அட்டை போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டிற்கு ராணுவ வீரர்கள் அளித்து வரும் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுங்கச்சாவடி ஊழியர்கள், ராணுவ வீரர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசுவாதாகும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இதில் எப்படி ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் அடிப்பது என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பயணிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.