94 ஆண்டுகளை நிறைவு செய்த உப்பு சத்தியாகிரக போராட்டம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்து இன்றுடன் 94 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டத்தின் வரலாற்று பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
உப்பு சத்தியாகிரகம்
உப்பு சத்தியாகிரகம்pt web

1947 ஆகஸ்ட் 15.... நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய திருநாடே கொண்டாட்டத்தில் திளைத்தது. ஆனால், அந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் இருக்கும் வலிகள் ஏராளம். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடி பலர் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர்.

அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை எனும் ஆயுதத்தை கையில் எடுத்த மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை, ஆங்கிலேயர்களை ஆட்டம் காணச் செய்தது. உப்புக்கு வரி விதிக்கும் ஆங்கில அரசின் சட்டத்தை அறவழியில் எதிர்த்து நாடு முழுவதும் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது.

குஜராத் மாநிலம் தண்டியில் மகாத்மா காந்தி தலைமையிலும் தமிழ்நாட்டின் வேதாரண்யத்தில் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி தலைமையிலும் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி திருச்சியில் இருந்து 100 தொண்டர்களுடன் ராஜாஜி பாதயாத்திரையை தொடங்கினார். இந்த குழு, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வேதாரண்யத்தை அடைந்தது. அன்றைய தினம் அதிகாலையில் உப்பு அள்ளி போராட்டத்தை தொடங்கிய ராஜாஜி கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை செல்ல நேரிட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியும் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டம் ஆங்கிலேய அரசின் அஸ்திவாரத்தை ஆட்டிப் பார்த்தது. அதன் விளைவாக, சிறையில் இருந்து காந்தி விடுவிக்கப்பட்டார். மேலும், இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க மகாத்மா காந்திக்கு ஆங்கில அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில், வைஸ்ராய் லார்டு இர்வினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, உப்பு சத்தியாகிரக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்படியாக, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெரும்பங்காற்றிய உப்பு சத்தியாகிரக யாத்திரை நடந்து இன்றுடன் 94 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்நாளில், நம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றுக்காக, தங்களது மூச்சுக்காற்றை விலையாக கொடுத்த தலைவர்களை நினைவுகூர்வோம்......

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com