அஜித் படத்தின் ரீமேக்கா சல்மானின் ‘கபி ஈத் கபி தீபாவளி’?
அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் ரீமேக் கதையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வீரம்’. அந்தப் படத்தில் சகோதர்கள் அனைவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அண்ணன் அஜித்திற்கு மணம் முடிக்க முயற்சிப்பார்கள். குடும்ப பாசத்தை எடுத்துக் கூறிய இந்தப் படத்தில் அஜித், பேசிய ‘தம்பி மயில்வாகனம்’ என்ற வசனம் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. ஆக்ஷன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த அஜித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்து பின்புலத்தை வைத்து உருவான இப்படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கபி ஈத் கபி தீபாவளி’ படம் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள படத்தின் ரீமேக்தான் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சல்மான் கான் தனது அடுத்த படமாக ‘கபி ஈத் கபி தீபாவளி’யை அறிவித்தார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல் வெளியானது. சல்மானின் ‘ஹவுஸ்புல் 4’ படத்தில் பூஜா நடித்திருந்தார். அதனை அடுத்து பூஜா இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையேதான் ‘கபி ஈத் கபி தீபாவளி’படம், அஜித்தின் வீரம் ரீமேக் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தப் படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.