”அரசின் மெத்தனப்போக்குதான் காரணம்” - 5 மாதங்களில் 8 சிவிங்கிப் புலிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

கடந்த 5 மாதங்களில் 8 சிவிங்கிப் புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
cheetah
cheetahFile Image

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளும் (5 பெண், 3 ஆண்), தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளும் (7 ஆண், 5 பெண்) கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. இதில் ‘சாஷா’ எனும் பெண் சிவிங்கிப் புலி சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தது. பின்னா், ‘உதய்’ எனும் ஆண் சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் மாதமும், ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி கடந்த மே மாதமும் இறந்தன.

இதனிடையே, ஜ்வாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ பூங்காவில் ஈன்றிருந்த 4 குட்டிகளில், 3 குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கடந்த வாரம் தேஜஸ், சுராஜ் என்ற இரு ஆண் சிவிங்கிப் புலிகள் இறந்தன. கடந்த 5 மாதங்களில் இதுவரை 8 சிவிங்கி புலிகள் உயிரிழந்தது, வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிவிங்கிப் புலிகள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Saket Gokhale
Saket Gokhale

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான சாகேத் கோகலே, அரசின் மெத்தனப்போக்கு காரணமாகவே சிவிங்கிப் புலிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அக்கடிதத்தில், சிவிங்கிப் புலிகளின் மரணத்திற்கு சண்டைதான் காரணம் என முதலில் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சிவிங்கிப் புலிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த ரேடியோ காலர்கள் அவற்றிற்குப் பொருந்தாமல் காயத்தை உண்டுபண்ணி இருப்பதாக பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காயங்களில் புழுக்கள் உண்டாகி 'செப்டிசீமியா' நோய்த்தொற்றுக்கு சிவிங்கிப் புலிகள் உள்ளாகியிருக்கின்றன. சிவிங்கிப் புலிகள் இடமாற்றத் திட்டம் மோடி அரசால் விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு அவற்றின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது. சிவிங்கிப் புலிகளின் இறப்புகள் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனும்போது இது ஏற்புடையது அல்ல'' என்று அந்த கடிதத்தில் சாகேத் கோகலே குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com