45 வயதிலேயே பிரதமராக துடிக்கிறாரா? சச்சின் பைலட்டை சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர்!
பாஜகவில் சேர்ந்து 45 வயதிற்குள் பிரதமராக சச்சின் பைலட் ஆசைப்படுகிறாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
சச்சின் பைலட் தான் பாஜகவில் சேரவில்லை என்று விளக்கமளித்திருந்தாலும், சச்சின் பைலட்டை பா.ஜ.க இயக்குவதாகவும், அவரின் துணையுடன் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸார் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சச்சின் பைலட்டை நோக்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா கேள்விக்கணைகளை வீசியுள்ளார். பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ''நான் கேட்கிறேன். 45 வயதிற்குள் சச்சின் பைலட் பிரதமராக ஆசைப்படுகிறாரா? ஒரு பக்கம் கொரோனா தலைவிரித்தாடுகிறது; மறுபக்கம் எல்லையில் சீனா அத்துமீறல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் ராஜஸ்தான் முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு ஏன் அவசரப்பட வேண்டும்?’’
27 வயதில் எம்.பி; 32 வயதில் மத்திய அமைச்சர்; 37 வயதில் மாநில காங்கிரஸ் தலைவர்; 41 வயதில் துணை முதல்வர் ஆனீர்கள். இப்போது 43 வயதில் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் நீங்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து 45 வயதில் பிரதமராகவும் ஆகி விடலாம் என நினைக்கிறீர்களா?’’ என சச்சினை துளைத்தெடுத்துள்ளார் மார்கரெட் ஆல்வா.
மேலும் அவர் கூறுகையில், ‘’ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு 150 ஆண்டுகால வரலாறு உண்டு. இந்த காலங்களில் நாங்கள் வென்றோம், தோற்றோம், சிறைகளுக்குச் சென்றோம், அதிகாரத்தையும் அனுபவித்தோம். காங்கிரஸை அழிக்க நினைத்தவர்கள் இடம் தெரியாமல் போய்விட்டார்கள்’’ என மார்கரெட் ஆல்வா கடுமையாக சாடியுள்ளார்.