சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதி
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சபரிமலை கோயில் வெள்ள நீரில் மூழ்கியது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் ஹில்டாப் மற்றும் திருவேணி ஆகிய பகுதிகளும் சேதம் அடைந்தன. புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை வருகிற 16ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்களின் தனியார் வாகனங்கள், நிலக்கல் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.