சபரிமலை கோயிலில் பெண்களுக்கான உரிமை ! ஜன.1-ல் பெண்கள் சுவர் போராட்டம்
சபரிமலையில் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சேர்ந்து மனித சங்கிலிபோல பெண்கள் சுவர் பேரணியில் ஈடுபட உள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கினர். அதேசமயம் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தமிழக பெண்களும் சபரிமலை செல்ல முயன்று போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக கோயிலுக்கு செல்ல முடியாமல் மீண்டும் திரும்பினர்.
இதனிடையே மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை கோயிலின் நடை நேற்று முன்தினம் அடைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சேர்ந்து ஜனவரி 1-ஆம் தேதி மனித சங்கிலி பேரணியில் ஈடுபட உள்ளனர். மும்பையை சேர்ந்த பெண்கள் குழு ஒன்று இத்தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி கேரள முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கை கோர்த்து மனித சங்கிலியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் வழிபட ஆண்களுக்கு இருக்கும் உரிமையை போலவே பெண்களுக்கும் உரிமை இருப்பதை எடுத்துக்கூறும் விதமாக அவர்கள் இந்த பேரணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.