குடியரசுத்தலைவர், ஐயப்பனுக்கு மட்டுமே இந்த சிறப்பு! சபரிமலை சன்னிதானம் குறித்த அரிய தகவல்!

குடியரசுத்தலைவர், ஐயப்பனுக்கு மட்டுமே இந்த சிறப்பு! சபரிமலை சன்னிதானம் குறித்த அரிய தகவல்!
குடியரசுத்தலைவர், ஐயப்பனுக்கு மட்டுமே இந்த சிறப்பு! சபரிமலை சன்னிதானம் குறித்த அரிய தகவல்!

இந்தியாவில் குடியரசுத் தலைவரை அடுத்து சபரிமலை சன்னிதானத்திற்கு சொந்த அஞ்சல் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு (பின் கோடு) உள்ளது. அதில் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவர். மற்றொருவர் சபரிமலை ஐயப்பன் என்றால் அது எல்லோருக்கும் விழியுயர்த்தி ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் தான். இந்திய ஜனாதிபதிக்கு அடுத்து ஸ்ரீ சபரிமலை ஐயப்பன், தனது சொந்த அஞ்சல் குறியீட்டை வைத்திருக்கிறார். ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீடு எண் 689713. இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணில் தற்போது சபரிமலை சன்னிதான தபால் நிலையம் இயங்க துவங்கியுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீடு மற்றும் தபால் நிலையத்தின் சிறப்புகளை பார்க்கலாம்.

சன்னிதானம் தபால் நிலையம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தபால் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில் சபரிமலையின் 18-ம் படி மற்றும் ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உலோக அஞ்சல் முத்திரை 1974-ம் ஆண்டு முதல் சன்னிதானம் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்தது. நமது நாட்டில் வேறு எந்த அஞ்சல்துறையும் இதுபோன்ற தனி அஞ்சல் முத்திரைகளைப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்த இந்திய தபால் துறையும் அனுமதிப்பதில்லை.

ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சன்னிதான தபால் நிலையம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும். பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும். இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, இந்த 18ம் படி மற்றும் ஐயப்பன் முத்திரையிடப்பட்ட கவர்களை வாங்கி தங்கள் வீடுகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடிதங்களாக அனுப்புகின்றனர். பத்திரப்படுத்தவும் செய்கின்றனர்.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் இந்த சிறப்பு உலோக அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படும். தொடர்ந்து அடுத்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும். நிரந்தர பிரம்மச்சாரியாக விளங்கும் ஐயப்ப சுவாமிக்கு பக்தர்கள் எழுதும் ஏராளமான கடிதங்கள் இந்த தபால் நிலையத்திற்கு ஏராளம் வருகின்றன. சந்தோஷம், சோகம், துக்கம், தீராத பிரச்னைகள், கவலைகள், காதல் என பல்வேறு உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் கடிதங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் இந்த சன்னிதான தபால் நிலையத்திற்கு வருகின்றன. ஐயப்பன் பெயரில் காணிக்கையாக மணியார்டர்களும் இந்த தபால் நிலையத்திற்கு வந்து கொட்டுகின்றன.

வீட்டில் நடக்கும் பல்வேறு வைபோகங்கள், விசேஷங்களுக்கு ஐயப்பனை அழைக்கும் முதல் அழைப்பிதழும் இங்கு வருகின்றன. இந்தக் கடிதங்கள் அனைத்தும் சன்னிதானத்தில் அய்யப்பனிடம் அளித்து நிவர்த்திக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் பூஜிக்கப்படுகிறது. பின் கடிதங்கள் சபரிமலை செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுறது. மணி ஆர்டர்கள் மூலம் வரும் பக்தர்கள் அனுப்பும் காணிக்கை பணம் தேவஸ்வம் போர்டின் அய்யப்பன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தபால் நிலையம் துவக்கப்பட்ட, கடிதங்களில் பெரும்பாலானவை பிற நாடுகளில் இருந்தே வருகின்றன.

சன்னிதானம் தபால் நிலையம் மூலம் அப்பம், அரவணை போன்ற சபரிமலை பிரசாதங்கள் மூலை முடுக்கெல்லாம் அனுப்பவும் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு. ஜனாதிபதிக்கு அடுத்து, தனி அஞ்சல் குறியீடு, சிறப்பு உலோக அஞ்சல் முத்திரை ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி பலரின கவனத்தையும் ஈர்த்துள்ளது. உற்று நோக்கவும் வைத்துள்ளது.

இது குறித்து சன்னிதானம் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் பி.எஸ்.அருண கூறும்போது, "சன்னிதானம் தபால் நிலையம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், ஆனால் 18-ம் படி, ஐயப்பன் சிலை உள்ளிட்ட உலோக முத்திரை 1974-ம் ஆண்டு அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மொபைல் சார்ஜிங், மணியார்டர் சிஸ்டம், இந்தியா போஸ்ட் பேமெண்ட் முறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பார்சல் சேவை போன்ற சேவைகளும் சன்னிதானம் தபால் நிலையத்தில் கிடைக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com