சபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை

சபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை

சபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்த பெண்ணைத் தாக்கியதாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்து, பின்னர் அவரை பிணையில் விடுதலை செய்தனர். 
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என கடந்த ஆண்டு செப். 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, கேரளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி பல்வேறு இந்து அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. 

இந்நிலையில், கடந்த நவம்பர் 6-ஆம் தேதி லலிதா (52) என்ற பெண் தனது பேரக்குழந்தைக்கு சோறூணு  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்தார். அப்போது, சித்திர ஆட்ட விசேஷம் என்ற வருடாந்திர சடங்குக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருந்ததால், லலிதா கோயிலுக்குள் செல்ல முயன்றார். அப்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், லலிதாவை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்ததுடன், கோயிலுக்குள் சென்றால் அதன் புனிதம் கெட்டு விடும் எனக்கூறி தடுத்து நிறுத்தினர். 

சோறூணு நிகழ்ச்சியை மேலும் நடத்தவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து விட்டனர். இதுதொடர்பாக, கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாஜக முக்கிய நிர்வாகியான வி.வி.ராஜேஷை இவ்வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்த்தனர். மேலும், பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கே. சுரேந்திரன், வல்சன் தில்லங்கேரி உள்ளிட்டவர்கள் மீது 120 (பி) பிரிவின் கீழ் சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை வி.வி.ராஜேஷை போலீஸார் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை அதிகாரி முன்னிலையில் தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்றும், அவரை சொந்த ஜாமீனில் ரூ.50 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தியதன் பேரிலும் அவரை பிணையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com