சபரிமலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க மறுத்த அரச குடும்பத்தினர்
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என பந்தளம் அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்களும், 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. அதாவது 10 மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. வழிபாட்டில் ஆண், பெண் பேதம் இல்லை எனக்கூறி இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. ஆனால் கோரிக்கையை நிராகரித்த முதலமைச்சர் பினராயி விஜயன், கோவிலுக்கு பெண்கள் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தொடர் போராட்டம் நடந்துவரும் நிலையில், நாளை முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆலோசனைக்கூட்டத்துக்கு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் வரையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என பந்தளம் அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ''சபரி மலை கோயிலில் பூஜை செய்யும் தந்திரி குடும்பத்தினரும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார்கள். குறிப்பிட்ட வயதுக்குள் பெண்களை அனுமதித்தல் கோயிலின் பாரம்பரியத்துக்கு எதிரானது. பாதுகாப்புக்கு பெண் காவலர்களை அனுமதிப்பதும் தவறானது'' என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.