மகர விளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை – தூய்மைப் பணிகள் தீவிரம்
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் முதல் பம்பை வரையில் தூய்மைப் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 16ம் தேதி துவங்கியது. 41 நாட்கள் நீண்டிருந்த மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் 26ம் தேதி நடை அடைக்கப்பட்டது.
இந்த மண்டல பூஜைக்காலத்தில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப நெகிழி உள்ளிட்ட கழிவுகளும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தினமும் தூய்மைப் பணியில் ஈடுபட்டாலும் கழிவுகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்ற பம்பை முதல் சன்னிதானம் வரையிலான ஏழு கிலோ மீட்டர் தூரம் பத்தர்கள் விட்டுச் சென்ற கழிவுகள் அதிகம் உள்ளது. இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் 18 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணியிலும், கிருமி நாசினி கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து கழுவி சுத்தம் செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.