சபரிமலை | தங்கம் முலாம் வழக்கு: மூடிய அறையில் விசாரணை தீவிரம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் மூடிய அறை விசாரணை நடத்தியது. 2019-ஆம் ஆண்டு தங்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதால், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் ஶ்ரீதரன்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலைகள் மற்றும் ஶ்ரீகோவில் கதவுகளின் தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளில் இருந்து தங்கம் காணாமல் போனதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றம் மூடிய அறை விசாரணையை நடத்தியுள்ள
வழக்கின் பின்னணி:
2019-ஆம் ஆண்டு, கோவிலின் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளைப் புதுப்பிக்கும் பணிக்காகச் சென்னைக்கு அனுப்பியபோது, அவற்றின் எடையில் சுமார் 4 கிலோவிற்கும் மேல் தங்கம் குறைந்திருந்ததாகக் கண்டறியப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணைக் குழுத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ரகசியமான முறையில், மூடிய அறையில் (In-Camera) வழக்கை விசாரித்தனர்.
வழக்கின் முக்கியமான விவரங்கள், ஆதாரங்கள் மற்றும் புலனாய்வின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியே கசிவதைத் தடுப்பதற்காகவே நீதிமன்றம் இத்தகைய மூடிய அறை விசாரணையை நடத்தியது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும், தங்க முலாம் பூசுவதற்கு நிதியுதவி செய்த பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சிறப்புப் புலனாய்வுக் குழு, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த முதல் இடைக்கால அறிக்கையைச் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. கோவிலின் விலைமதிப்பற்ற அனைத்துப் பொருட்களின் விரிவான இருப்புக் கணக்கைப் பதிவு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. சங்கரன் நீதிமன்றத்தின் அமீகஸ் கியூரியாக (Amicus Curiae - நீதிமன்றத்திற்கு உதவும் நண்பர்) நியமிக்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வழக்கு சபரிமலை கோவிலின் புனிதத்தன்மை மற்றும் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதால், நீதிமன்றம் இந்த விசாரணையை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.